காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முக்கொம்பு மேலணை மற்றும் கல்லணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வந்தடைந்து, திருமானூரை கடந்து செல்கிறது. அரியலூர் – தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களையும் இணைக்கும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் நீரானது இரு
கரைகளையும் தொட்டுச் செல்கிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி கொடுத்துள்ள செய்தி குறிப்பில்,
கொள்ளிடம் ஆற்றில் 1,00,000 கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.