பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது சகோதரரின் குடும்பத்தினர் 5 பேர், தனது சகோதரி, தனது மாமியார் ஆகியோர் கொல்லப்பட்டதாக மசூத் அசார் கூறியுள்ளார். மசூத் அசார் என்பவர் புல்வமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர். இவர் 1999 இல் நடந்த கந்தஹார் விமான கடத்தலின் போது விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவர். பாகிஸ்தான் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற (பல்வேறு தீவிரவாத செயல்களைப் புரிந்த) தீவிரவாத இயக்கத்தைத் தொடங்கியவர். இதேபோல் இந்திய தாக்குதலில் ஜெய்ஷ் உயர்மட்டத் தலைவர் அப்துல் ரவூப் அசார் குடும்ப உறுப்பினரும் கொல்லப்பட்டார். மௌலானா காஷிஃப் முழு குடும்பமும் கொல்லப்பட்டனர்.