கரூரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் கைதான சுபாஷ் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 19.7.2020 அன்று மாலை சுபாஷ், தனது நண்பர்கள் 3 பேருடன் அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார்.
அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த தாமோதரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், தேர்தல் முன்விரோதம் காரணமாகவும், தங்கவேல் கொலைக்கு பழிக்குப்பழியாகவும் பயங்கர ஆயுதங்களுடன் சுபாசை சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுபாஷின் அண்ணன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜதுரை (25), தங்கவேலு மகன் கவியரசன் (21), பக்கிரிசாமி மகன் சுபகணேஷ் (24), தணிகாசலம் மகன் தமிழ்வாணன் (23), தாமோதரன் மகன் வில்பார் (24), ஆறுமுகம் மகன் மணிமாறன் (36), வக்கீல் தர்மராஜ் (47), முருகன் மகன் தினேஷ்குமார் (22), பக்கிரிசாமி, மணிவண்ணன் (42), வெங்கடாபதி (39) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே வெங்கடாபதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் பக்கிரிசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி சரஸ்வதி தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்பார், மணிமாறன், தர்மராஜ், தினேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார். தண்டனை பெற்றவர்களில் தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ் ஆகியோர் மீது ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

