தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.17 சதவீதம் கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15 இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 415 மாணவர்களில் 13 ஆயிரத்து 500 பேரும், 14 ஆயிரத்து 860 மாணவிகளில் 14 ஆயிரத்து 478 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 93.65 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.43 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகரித்துள்ளது.
அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 94.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 88 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.