தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படி நடந்து சென்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவர்கள் கொண்டு சென்ற பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 26 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரியை சேர்ந்த துரை (62) கண்ணப்பன் (55) என்பது தெரிய வந்தது. இவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.

