மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் (29), சாந்திரி (37) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இதில், ரோகித் கொச்சி கப்பல் கட்டும் தளத்திலும், சாந்திரி உடுப்பி கப்பல் கட்டும் தளத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.
இருவரும் பணத்திற்காக கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

