தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி பெட்ரோல்பங்க் அருகே சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன்அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த மினி லாரியில் 40 கிலோ எடை கொண்ட 37 மூட்டைகளில் 1,480 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அவற்றையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக தஞ்சை வடக்கு வாசல் கங்காநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 54) என்பவரை கைது செய்தனர். இவர் தான் மினி லாரி உரிமையாளரும், டிரைவரும் ஆவார். வடக்கு வாசல் மற்றும் பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதே போல் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அரிசியையும், சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் தஞ்சை நாகை சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாலாஜி (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தஞ்சை, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கால்நடை தீவனத்துக்காக அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுப்பிரமணியன் மற்றும் பாலாஜி ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2,130 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.