கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் உலகின் மிகப்பெரிய வடிவமாக எட்டரை அடி உயரத்தில் சுயம்பு நடராஜர் பெருமான் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர்கள் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர். ‘தில்லை அம்பலம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், திரைப்படத்துறை
முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதில், நடராஜபெருமான் இடது காலை தூக்கி ஆடிய பாதம் வடிவில் வரிசையாக நின்ற மாணவர்கள் 22 நிமிடங்கள் பரத நாட்டியம் ஆடினர். இந்த பரதநாட்டிய நிகழ்வை இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியில், கொற்றவை தமிழ் மடாதிபதி சுரேந்திர ஸ்ரீமகராஜ், பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், திரைப்பட நடிகர் மோஹன் வைத்யா, நடன இயக்குனர் சுதா ஸ்வர்ணலட்சுமி, நடன கலைஞர் அருணா சுப்பிரமணியம், இசைக்கலைஞர் வேலு ஆசான் மற்றும் நாட்டிய மாணவர்களின் பெற்றோர் என 10,000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் பரத நாட்டிய மாணவிகள் ஆடிய இந்த மாபெரும் நாட்டிய நிகழ்வை அனைவரும் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.