இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில் தீவிரவாத தடுப்புப் படையினர் சந்தேகத்துக்குரிய சிலரை கடந்த ஓராண்டாக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர்.
அப்போது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள மூன்று பேர் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, கண்காணிப்பு தீவிரமடைந்தது. அதில் மூன்று பேரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, மூன்று பேரும் இந்தியாவில் உள்ள ஆயுதக்கும்பலுடன் சில ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது திடீரென அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி முனையில் அனைவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்தது அம்பலமானது.
எந்தெந்த இடங்கள் குறிவைக்கப்பட்டன, எவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, இந்தியாவில் வேறு எங்கு, எவ்வளவு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்பன போன்ற பல்வேறு கேள்வி எழுப்பி, அவற்றுக்கான விவரங்களை அறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இந்திய மண்ணில் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் இணையம் வழி பிரசாரம் செய்வது, ஆள் சேர்ப்பு, நிதி வசூலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

