ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நிஷாந்த் உட்பட 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் கைதைக் கண்டித்து நிஷாந்தின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து வாலிபர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எதிர் தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

