தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் இளைஞரின் பைக்கை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பத்தாம் தேதி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேத்தில் பங்கேற்பதற்காக தஞ்சை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களில் அதிகம் பேர் வந்திருந்தனர். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் சசிக்குமார் (39) தனது மனைவியுடன் பைக்கில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்தார்.
பைக்கை ஆர்ச் அருகில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் சசிக்குமார் பைக்கை தேடி பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாலுக்கா போலீசில் சசிக்குமார் புகார் செய்தார்.
இதன் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சசிகுமாரின் பைக்கை மாரியம்மன் கோயில் கடகடப்பை பகுதி தெற்கு தெருவை சேர்ந்த தனபால் மகன் ராஜு (20), புண்ணியமூர்த்தி மகன் மணிகண்டன் (20), கீழசித்தர் காடு புதிய சேர்ந்த மதியழகன் மகன் மனோஜ் (25) ஆகியோர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து தாலுக்கா போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.