திருச்சி அமைச்சர்கள் கே.என். நேருவும், மகேஸ் பொய்யாமொழியும், திமுகவில் இருந்தாலும், அவர்கள் இருவரும் தங்களுக்கான கோஷ்டிகளை உருவாக்கி திருச்சியில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது திருச்சி மக்களுக்கு நன்றாகவே தெரியும். திருச்சி மாநகராட்சி மேயராக இருக்கும் அன்பழகன் நேருவின் ஆதரவாளர். துணை மேயா் திவ்யா அமைச்சர் மகேசின் ஆதரவாளர்.
திருச்சியில் மீன் உணவு தயாரிக்கும் ஆலையை தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. இதைமண்டல தலைவரும், அமைச்சர் மகேசின் ஆதரவாளருமான மதிவாணன் தலைமையில் 32 கவுன்சிலர்கள் எதிர்த்து மாநகராட்சியில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திருச்சியில் அமைச்சர்கள் கோஷ்டிகளின் சண்டை உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, மு.மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா ,
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
மண்டல குழு தலைவர் மதிவாணன் (திமுக):
திருச்சி அரியமங்கலத்தில் 47.7 ஏக்கரில் குப்பை கிடங்கு உள்ளது.இந்த குப்பை கிடங்கை பொதுமக்கள் நலன் கருதி முழுமையாக அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இப்படி இருக்கும்போது குப்பை கிடங்கில் பாதாள சாக்கடை கழிவு நீரை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளுக்கும்,நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கும் இடையே .கோழி கழிவுகளைக் கொண்டு மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதை முற்றிலுமாக நிறுத்தி தடை செய்ய வேண்டும்.
இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பொதுமக்கள் இந்த திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.அமைச்சரும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில்,
இதுகுறித்து நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பணிகளை தொடங்கியது கண்டிக்கத்தக்கது.மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,இதை கண்டித்தும் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக செயலாளரும்,மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் தலைமையில்
துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னிலையில் 27 திமுக கவுன்சிலர்கள்,காங்கிரஸ் கவுன்சிலர்கள் வக்கீல் கோவிந்தராஜன், எல்.ரெக்ஸ்,முன்னாள் மேயர் சுஜாதா,விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ந.பிரபாகரன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ் ஆகிய 32 பேர் வெளிநடப்பு செய்தனர்.
திமுக மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 32 பேர் வெளிநடப்பு செய்த சம்பவம் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேயர் அன்பழகன் :
நீர் நிலைகளில் கோழி கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் நல்ல திட்டம். துர்நாற்றம் அடிக்காது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர் விளக்குவார் என்றார்.
மாநகராட்சி சுகாதார அலுவலர்
விஜய் சந்திரன் :-
நாளொன்றுக்கு திருச்சி மாநகராட்சியில் 25 டன் கோழி, மீன் கழிவுகள் வெளியேற்றுகிறது.
இந்த கழிவுகளை சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் மூட்டை கட்டி போட்டு விடுகிறார்கள்.
முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த கழிவுகளை அப்புறப்படுத்தியது. இப்போது அவர்கள் எடுக்கவில்லை.
கோழி கழிவுகளில் இருந்து
மீன் உணவு தயாரிக்கும் திட்டம்
அறிவியல் பூர்வமாக நவீன முறையில் 1500 முதல் 2000 செல்சியஸ் வெப்ப நிலையில் அழுத்தி மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, இறால் பண்ணைகளுக்கு தீவனமாக அனுப்பத் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்தினால் மாசு ஏற்படாது. இது தொடர்பாக செயல் விளக்கம் காண்பிக்க தயாராக உள்ளோம்.
மாநகராட்சி பொறியாளர்
சிவபாதம் :-
அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் 18 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடந்தன. இதை பயோ மைனிங் திட்டத்தின் கீழ்
தற்போது குறைத்து 6.6 லட்சம் டன்னாக குறைத்துள்ளோம்.
மொத்தம் உள்ள 47.7 ஏக்கர் பரப்பளவில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் 30 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுரேஷ் (சி.பி.எம்..) :
அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுவதுமாக அப்புறப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியாக மீத்தேன் பயோ மைனிங் திடக்கழிவு மேலாண்மை என பல திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது
அதே இடத்தில் கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்து மீன் உணவாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆகவே இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.
மேயர் அன்பழகன் :
கோழிக் கழிவுகளை
மறுசுழற்சி செய்யும் திட்டப்பணி கட்டுமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அமைச்சருடன் கலந்து ஆலோசனை
செய்துவிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
கோ.கு.அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர்):-
எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாமன்றத்தை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள துணை மேயரே வெளிநடப்பு செய்துள்ளார்.அவர் வெளிநடப்பு செய்வதாக இருந்திருந்தால் இன்று அவர் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டாம்.
அரவிந்தன் (அதிமுக) :-
திருச்சி இ.பி. ரோடு பகுதியில் உள்ள லாரி செட், பெரியசாமி டவர், மார்க்கெட் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஆணையரின் பெயரை போட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே நான் புகார் அளித்தும் கட்டண வசூல் செய்யும் நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர்.அப்போது கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் ,ராமதாஸ் ஆகியோர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினர். அவர்கள் மேயர் அன்பழகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றும் பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.