தமிழக – கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், முறையான ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட சுமார் 415 கிராம் தங்க மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரைப் பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று வாளையார் சோதனைச் சாவடியில் வரும் அனைத்து தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன.
அப்போது, கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கோவை நோக்கி வந்த கேரள அரசுப் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, கேரளாவைச் சேர்ந்த ஜாதி என்பவர் உரிய ஆவணங்களின்றி 415 கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருச்சூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருவது தெரியவந்தது. கோவையில் உள்ள சிறிய நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக, முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்களின்றி இந்த நகைகளைக் கொண்டு வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க மோதிரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிடிபட்ட தங்கத்தையும், சம்பந்தப்பட்ட நபரையும் காவல் துறையினர் கோவை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் எல்லையில் பிடிபட்ட சம்பவம், கோவை மற்றும் கேரள நகை வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

