மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மகாநந்த நகர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் லாக்கரில் இருந்த ரூ.5 கோடி நகை, ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சி.சி.டி.வி. காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 2 திருடர்கள் சுவர் ஏறி குதித்து, மேல் தளத்திற்கு ஏறி சென்று, பூட்டை திறந்து வங்கிக்குள் சென்று லாக்கரை திறந்து உள்ளே இருந்தவற்றை எடுத்து சென்றுள்ளனர். வங்கியின் பூட்டு, லாக்கரை உடைக்காமல் நகை, பணம் திருடப்பட்டு இருந்ததில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால், வங்கி ஊழியர் ஒருவரால் இது நடந்திருக்க கூடும் என்ற அடிப்படையில் விசாரணை தொடர்ந்தது. விசாரணையில் வங்கியின் ஒப்பந்த ஊழியரான ஜெய் பவ்சார், கூட்டாளிகள் 4 பேருடன் திட்டம் தீட்டி திருடியது தெரிய வந்தது . இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு பிரதீப் கூறும்போது, பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர். அப்படி அடகு வைத்த நகைகளை ஜெய்பவ்சார் கூட்டாளிகளுடன் திடியது தெரியவந்தது என்றார்.
அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அலட்சியத்துடன் செயல்பட்ட வங்கி மேலாளர் மற்றும் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளார்.