சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருட்டுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கைதான 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எனவே 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையின்போது அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.