கோவை சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல்: சொகுசு பங்களாவில் பதுக்கிய கும்பலுக்கு வலைவீச்சு !!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான சுமார் 500 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, சூலூர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம்
சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரைக்கு, பாப்பம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆய்வாளர் லெனின் அப்பாதுரை அயோத்தியாபுரம் சிவா கார்டன் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் ஆரவாரம் இன்றி ஒரு சொகுசு பங்களா திறந்து கிடந்ததைக் கண்டார்.
சந்தேகமடைந்த ஆய்வாளர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது, அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதும், ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சந்தேகம் வலுக்கவே, சாவி துவாரம் வழியாகப் பார்த்தபோது, அந்த அறைக்குள் மூட்டைகளில் மர்மப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் கோபிநாத் என்பவரைத் தொடர்புகொண்டு வரவழைத்த காவல்துறையினர், அவர் முன்னிலையில் பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்தனர். அப்போது, அந்த அறையில் சுமார் 500 கிலோ அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டின் உரிமையாளர் கோபிநாத்திடம் விசாரித்தபோது, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் இரண்டு வாலிபர்கள் குடும்பத்துடன் வந்து வீட்டை வாடகைக்கு கேட்டதாகவும், மளிகைக் கடை வைத்திருப்பதாகக் கூறியதால் அவர்களை நம்பி வீட்டை வாடகைக்கு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக வாடகைக்கு இருந்த நபரை சூலூர் காவல்துறையினர் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.