நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி தொகை வாடிக்கையாளர்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது.
இதில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.58,330 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இதில் அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள தொகை ரூ.19,330 கோடி ஆகும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,911 கோடியும், கனரா வங்கியில் ரூ.6,278 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளன.
தனியார் வங்கிகளில் உள்ள மொத்த தொகை ரூ.8,674 கோடி ஆகும். இதில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063 கோடியும், எச்டிஎப்சி வங்கியில் ரூ.1,609 கோடியும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளன.
இந்த தொகை பற்றிய விவரங்களை ஒரே இடத்தில் தேடுவதற்காக ரிசர்வ் வங்கி ஒரு இணையதளத்தை தொடங்கி உள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி அந்த இணையதளத்தை 8 லட்சத்து 59 ஆயிரத்து 683 பேர் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.