திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
அஜய் குமார் சுகந்த் என்பவரைக் கைதுசெய்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ எனும் பால்பண்ணை மூலமாக அந்தப் போலி நெய் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
லட்டு தயாரிப்பதற்குத் தேவையான நெய்யை அனுப்பி வைப்பதற்குத் திருப்பதி தேவஸ்தானத்துடன் போலே பாபா நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.
ஆனால், அந்நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஐந்தாண்டுக் காலத்தில் ஒரு சொட்டுகூட பாலையோ வெண்ணெய்யையோ கொள்முதல் செய்யவில்லை என்பது விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.
மாறாக, மோனோடைகிளிசரைடு, அசிட்டிக் அமில எஸ்டர் போன்ற பல்வேறு வேதிப்பொருள்களை போலே பாபா நிறுவனத்திற்கு அஜய் குமார் அனுப்பிவைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழு நெல்லூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தராகண்டின் பகவான்பூரைச் சேர்ந்த போமில் ஜெயின், விபின் ஜெயின் எனும் இருவர்க்குச் சொந்தமான போலா பாபா நிறுவனம், போலியாக ஒரு நெய் தயாரிப்பு ஆலையை அமைத்திருந்ததாக சிபிஐ கூறியது. அத்துடன், பால் கொள்முதல் செய்தது, அதற்கான பணம் வழங்கியது குறித்துப் பொய்யான ஆவணங்களை அவர்கள் தயார்செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு போலே பாபா நிறுவனம் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறியது.
ஆயினும், திருப்பதியைச் சேர்ந்த வைஷ்ணவி பால்பண்ணை, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மல் கங்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மூலமாக வெற்றிகரமாக ஒப்பந்தங்களைப் பெற்று, திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தொடர்ந்து கலப்பட நெய்யை அனுப்பிவந்தது.
விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஏஆர் பால்பண்ணைக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்பட்ட நான்கு நெய்க் கொள்கலன்களைக் கடந்த 2024 ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது. அவற்றை வைஷ்ணவி டெய்ரி மூலமாக போலே பாபா நிறுவனம் மீண்டும் தேவஸ்தானத்திற்கே அனுப்பி வைத்ததும் சிபிஐ விசாரணைமூலம் தெரியவந்தது.
திண்டுக்கல்லில் உள்ள ஏஆர் பால்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, தேவஸ்தானம் திருப்பி அனுப்பிய நான்கு கொள்கலன்களும் அந்த ஆலைக்கே வராததும் வைஷ்ணவி பால்பண்ணைக்கு அருகிலுள்ள கல் குவாரிக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

