பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளில் பதவிகளில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா போன்றவர்களுக்கு பதவி கொடுக்காமல் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி 75 வயது பூர்த்தியாகிறது. எனவே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜகவின் சில தலைவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார்கள்.
வெளிப்படையாக சொல்ல அவர்களுக்கு தைரியமில்லை. இந்த நிலையில், ஏற்கனவே 75 வயது விதி பிரதமர் மோடிக்கு பொருந்தாது என ஏற்கனவே அமித்ஷா கூறி விட்டார்.
இந்த நிலையில் ஆர்எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 75வயது கோஷத்தை பட்டும் படாமலும் எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். முன்னோடி மோரோபந்த் பிங்கலே புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசும்போது, தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்.
மோரோபந்த் பிங்கலே ஒருமுறை, 75 வயதிற்குப் பிறகு உங்களுக்கு ஒரு சால்வை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டால், நீங்கள் உடனே பணியை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள்; ஒதுங்கி மற்றவர்களை உள்ளே வர விடுங்கள் என்று அர்த்தம் என்பார் பிங்கலே. வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தவுடன் கண்ணியமாக விலகிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்” என்று பேசினார்.
இந்த கருத்தை தெரிவித்த மோகன் பகவத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி 75 ஆகிறது. எனவே அவர் செப்டம்பர் 11க்கு பிறகு தனது பதவியில் இருந்து விலகி, மோடியையும் பதவி விலக நெருக்கடி கொடுக்கலாம். இதற்காகத்தான் அவர் இப்போதே இந்த கருத்தை வலியுறுத்துகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் மோடி விலகுவாரா, அல்லது அவரது பாணியிலேயே அவரை வெளியேற்ற போர்க்குரல் கட்சிக்குள் எழும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.