திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜகண்ணுவின் மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் காவல் துறையினர் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியுள்ளார்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்தும் நிலைபாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.