துபாயில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒரு பயணியை பிடித்து அவர் கொண்டு வந்திருந்த உடமைகளை சோதனை போட்டனர்.

அவர் ஜூஸ் மிக்சர் கொண்டு வந்திருந்தார். அதன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த சாதனங்களை பிரித்து பார்த்தபோது அதற்குள் 2.579 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தை அவர் தகடுகள் வடிவில் உள்ளே மறைத்து வைத்திருந்தார். அந்த தங்கம் 24 காரட் வகையை சார்ந்தது. அதன் மார்க்கெட் மதிப்பு ரூ.1 கோடியே 83 லட்சம் ரூபாய். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

