Skip to content

5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கண்ணன் நகர் அருகில் மருந்தகம், ஹார்டுவேர்ஸ், ஸ்டுடியோ என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை இப்பகுதியில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் கடையை திறக்க வந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உடன் அவர் இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதற்கிடையில் இப்பகுதியில் உள்ள சிவா ஸ்டூடியோ, கண்ணன் ஹார்டுவேர்ஸ், லெஷ்மி

மெடிக்கல்ஸ், ஜெயந்தி பேக்கரி ஆகிய கடைகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்டூடியோவில் இருந்து ரூ.1000 பணம் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் ஆகியவையும், ஹைப்பர் மார்க்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரமும், லெஷ்மி மெடிக்கலில் இருந்து ரூ.5 ஆயிரமும், ஜெயந்தி பேக்கரியில் இருந்து ரூ.5 ஆயிரமும் திருட்டு போய் இருப்பதாக அந்த கடைகளின் உரிமையாளர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அதிகாலை 2.24 மணிக்கு ஒரு பைக்கில் இருவர் திருட்டு போன ஒரு கடைக்கு அருகில் சுற்றி வருவது பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பைக்கில் வரும் இருவரும் வாலிபர்கள் போல் தெரிகிறது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!