கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில் 7ம் தேதி அவர் பள்ளிக்கு இறுதித்தேர்வு எழுத வந்து உள்ளார். அவருடன் மாணவியின் தாயாரும் உடன் வந்து, மாணவி பூப்பெய்தி இருப்பதால் அவரை தனியாக உட்காரவைத்து தேர்வு எழுத வைக்கும்படி கூறி இருக்கிறார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்துள்ளது. 8ம்தேதியும் இதே நிலை நீடித்தது. இதனால் மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதற்கிடையே அவர் வெளியில் இருந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இன்று கோவை வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும், பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேட்டனர். அவர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும என கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை கல்வி அதிகாரிகள், மற்றும் பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
பள்ளி நிர்வாகத்தினரிடம் நடத்திய விசாரணையில் மாணவியின் பெற்றோர் தான் மகளுக்கு எதும் தொற்று ஏற்படும் தனியாக அமர வையுங்கள் என கேட்டதால் தான் மாணவியை தனியாக அமரவைத்து தேர்வு எழுத வைத்தோம் எங்களுக்கு வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை என தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி வடிவேல்(உதவி இயக்குநர்) விசாரணை நடத்தினார். மேலும் இந்த பள்ளி மாணவியின் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி (ASP) காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் இந்த விசாரணையை தொடர்ந்து பள்ளி முதல்வர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.