Skip to content

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்குச் செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த சென்னை துணை ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.

 

error: Content is protected !!