காஷ்மீரின் சுற்றுலா புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர். இந்திய அரசும் மகிழ்ந்தது.
ஆனால் ….. இந்தியாவன் வளம், வளர்ச்சி தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக தீவிரவாதத்தின் தாய்வீடாம் பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. அதன் விளைவு தான் ….. கடந்த மாதம் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல்,
பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியது.
.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இதுவரை சிக்கவில்லை. அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இறக்குமதிக்கு முழு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக கருதப்படும் என கூறியிருக்கும் பாகிஸ்தான் அத்தகைய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக எச்சரித்துள்ளதுடன் இந்தியா மீது அணுசக்திகளை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று மிரட்டி வருகிறது. ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் இந்த மிரட்டலை விடுத்து இருக்கிறார்.
எனவே நாம் விரும்பாவிட்டாலும், போர் நம் மீது திணிக்கப்படுகிறது என்ற நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, பொருளாதாரம், தொழில் வளத்தில் வளர்ந்து உள்ள நாடு.
ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை இப்படி சொல்லிக்கொள்ள எந்த விஷயங்களும் இல்லை. அங்கு ஏற்கனவே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது, ஆட்சியாளர்களே தீவிரவாதிகளின் தொடர்பில் தான் தங்கள் பதவியை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் பக்கத்து நாட்டில் போய் 26 பேரை சுட்டுக்கொன்றதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.
குறைந்தபட்சம் அந்த தீவிரவாதிகளை நாங்கள் வேட்டையாடுவோம் என்று கூட சொல்ல முன்வரவில்லை. காரணம் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானால் ஏவப்பட்ட அம்புகள். ஏற்கனவே மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது என்பதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றபோதிலும், எத்தனை முறை தான் தீவிரவாதிகளின் தாக்குதலை பொறுத்துக்கொண்டு காந்தியத்தை பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்க முடியும். ? அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்தால் தான் பாகிஸ்தான் சில வருடங்களுக்காவது திருந்தும்.
உள்நாட்டு குழப்பம், ஆட்சியாளர்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல், பிரிவினைவாதம் இப்படி பல காரணங்களால் திணறிப்போய் இருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், இந்தியா போர் தொடுத்தால் அதனால் நாம் தப்பித்துக்கொள்ளலாம், பாகிஸ்தான் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் தான் நடந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது.
ஏற்கனவே 1947-48, 1965, 1971, 1999 என இந்தியாவுடன் 4 போர்களை சந்தித்து சின்னாபின்னமான பாகிஸ்தான் மீண்டும் போரை தொடங்க ஆயத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்தியா கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு கொடுத்த பாடத்தை மறந்து விட்டது . 25 வருடங்கள் ஆகி விட்டதால் மீண்டும் இந்தியாவிடம் பாடம் கற்க விரும்புகிறது பாகிஸ்தான்.
பஹல்காம் தாக்குதல் நடந்த மறுநாளே இந்திய பிரதமர் மோடி , கற்பனைக்கு எட்டாத பதிலடி பாகிஸ்தானுக்கு தருவோம் என சூளுரைத்து விட்டார். எனவே பாகிஸ்தானுக்கு எத்தகைய பதிலடி தருவது என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, முப்படைகளும் கடந்த சில நாட்களாக போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்கும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது கடற்படை மற்றும் விமானப்படைகளின் போர் பயிற்சி குறித்தும் தயார் நிலை குறித்தும் அவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர்.
இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு எந்த வகையான பதிலடி தருவது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி உள்ளனர். பஹல்காம் தாக்குதல் நடந்து இதுவரை 12 நாட்களான நிலையில், கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து பாதுகாப்பு தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானும் போருக்கான முஸ்தீபில் ஈடுபட்டு உள்ளது. அந்நாட்டில் உள்ள அனைத்து கட்சித்தலைவர்களிடமும், இந்தியாவுடனான போருக்கு ஆதரவு திரட்டி உள்ளது. இதற்காக நடந்த கூட்டத்தில் இம்ரான்கான் கட்சி மட்டும் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தானும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு போருக்கு தயாராகி வருகிறது. நேற்று கூட ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியா முழுவதும் நாளை (மே 7) போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போருக்கு முன்பாக நாட்டு மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற ஒத்திகைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஒத்திகையில் 5 முக்கிய விஷயங்களை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
* எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
* எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
* வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
* அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
* அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல்.
மேற்கண்ட பயிற்சிகளை போர்கால ஒத்திகையில் மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த போர் ஒத்திகை எல்லை மாநிலங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டாயமாக நடத்தப்படும்.
கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது, இதுபோன்ற போர்க்கால ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பிறகு முதல் முறையாக தற்போதுதான் போர்க்கால ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூரில் கன்டோன்மென்ட் பகுதியில் இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட்டு ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரை மணி நேரம் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போர் ஒத்திகை நடத்தப்படும் அளவுக்கு நிலை வந்து விட்டதால் போர் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். இனி எப்போது தாக்குதல் என்பது தான் 140 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போதைய நிலையில் போர் மூண்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கமே நிற்கும். அப்படி இல்லாவிட்டாலும், நிச்சயமாக அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ராணுவ உதவி அளிக்காது என்பது உறுதி. பாகிஸ்தான் தற்போதைய நிலையில் சில இஸ்லாமிய நாடுகளையும், சீனாவையும் மட்டுமே நம்பி உள்ளது.
இந்திய ராணுவத்தின் பலம், கட்டமைப்புகளுடன், பாகிஸ்தான் ராணுவ பலத்தை ஒப்பிட்டால் பாகிஸ்தான் 4 நாள் கூட இந்தியாவுடன் போர் நடத்த முடியாது என்பது தான் நிதர்சனம்.
ஆனால் உலக நலனிலோ, நாட்டு நலனிலோ , ஏன் மக்கள் மீதோ எந்தஅக்கறையும் இல்லாத ஒரு மனநோயாளி எதுவேண்டுமானாலும் செய்வான் என்பதால், அதற்கு இந்தியா இடம் கொடுத்து விடாமல், ஆரம்பத்திலேயே அந்த பாகிஸ்தான் என்ற நச்சு பாம்பை நசுக்க வேண்டும் என்பது தான் உலக நலனனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரின் எண்ணமாயிருக்கிறது.
இதனை இந்திய பிரதமர் மோடி நிச்சயம் செய்து காட்டுவார். ஒட்டுமொத்த இந்தியாவும், தீவிரவாதத்திற்கு எதிரான உலகநாடுகளும் மோடிக்கு பக்கபலமாக ஆதரவு கரம் நீட்டி உள்ளன. இனி போர் பிரகடனம் தான் …… அடுத்தது வெற்றி செய்தி தான் . வெல்லும் இந்தியா….