உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.
கோவில் வளாகத்தில் ஆடி வீதியில் நடைபெற்ற திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை காலை 7.55 மணிக்கு எழுந்தருளினர். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 7.58 மணிக்கு எழுந்தருளினர்.
அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8.04 மணியளவில் மேடையில் எழுந்தருளினர். பவளக்கனிவாய் பெருமாள் காலை 8.06 மணியளவில் மேடையில் எழுந்தருளினார். பின்னர் 8.13 மணியளவில் விநாயகர் பூஜையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜையுடன் திருக்கல்யாணம் தொடங்கியது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பூஜைக்கு பின்பு 8.41-க்கு காப்பு கட்டப்பட்டது. காலை 8.43 மணியளவில் தாரைவார்க்கும் வைபவம் நடைபெற்றது. காலை 8.45 மணியளவில் மாலைகள் மாற்றும் வைபவம் நடந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது. காலை 8.51-க்கு திக்கல்யாணம் நடைபெற்றது.பின்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது திருமணமான பெண்கள் புதுத்தாலியை அணிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருமணத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் திருமண மொய் செய்யும் சடங்கும் நடந்தது. இதற்காக ஆங்காங்கே ஜிபே கவுன்டர்களும் வைக்கப்பட்டிருந்தது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.. 12-ம் நாள் (மே 10) தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.