மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த 65 பள்ளிகளில் உள்ள 251 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தலம், வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பார் ஸ்டாலின், போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகனங்களில் ஏறி சோதனை மேற்கொண்டார். வாகனங்கள் இயக்கி பார்க்கப்பட்டது. இதில் குறைகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. குறைகளை சரி செய்து மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
