உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘‘நாடு வலுப்பெற்றது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதாரத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டில் நீதித்துறையோ, அரசு நிர்வாகமோ, நாடாளுமன்றமோ உயர்ந்தது அல்ல, அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது.
அதன் மற்ற 3 தூண்களும் அரசியலமைப்பின்படி இணைந்து செயல்பட வேண்டும். அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அது அடிப்படை கோட்பாட்டில் கை வைக்க முடியாது. குறிப்பாக அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களான சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் போன்றவற்றை நாடாளுமன்றம் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. அரசியலமைப்பின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுக்கொன்று உரிய மரியாதை அளிக்க வேண்டும்’’ ,
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம்அளித்த தீர்ப்பை தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றத்தை விட நாடாளுமன்றமே உயர்ந்தது என்று கூறி இருந்தார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி மூலம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.