திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற ம. முருகேசன் , முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம் ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப். 26- ந் தேதி முதல் 2023 அக். 30 – ந் தேதி வரை விவசாயத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் பண்ணைக்கருவிகள், தார்பாலின், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் ஆகிய வேளாண் இடுபொருள்களை ரூ. 2.25 கோடிக்கு கொள்முதல் செய்தனர்.
இந்த கொள்முதலின்போது, மாவட்ட அளவிலான கொள்முதல் குழு கூட்டம் நடத்தாமலும், கொள்முதல் கமிட்டி தலைவர் அல்லது மாவட்ட கலெக்டரின் அனுமதி ஒப்புதல் பெறாமலும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும் தன்னிச்சையாக சந்தை விலையைவிட அதிக விலைக்கு தரமற்ற வேளாண் உபகரணங்களை கொள்முதல் செய்து, பயனாளிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சில பயனாளிகளுக்கு பண்ணைக் கருவிகளை வழங்காமல், வழங்கியதாக கணக்கு காட்டி அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கு ரூ. 30 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட காலகட்டத்தில் பண்ணைக் கருவிகள் வாங்கிய 3,416 பயனாளிகளில் 100 பயனாளிகளை விசாரித்ததில், 34 பேர் பண்ணைக்கருவிகளை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் 34 பயனாளிகளுக்கான மானியத் தொகை ரூ. 52,088 ஐ முறைகேடு செய்துள்ளனர்.
இது குறித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த எம். அப்துல்லா என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி
கோ. மணிகண்டன், ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீஸôர், முன்னாள் வேளாண் இணை இயக்குநர் ம. முருகேசன், முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம் ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.