Skip to content

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பெண் ஊழியர்களை இரவு வரை அலுவலகத்திலேயே  வைத்திருந்து டார்ச்சர் செய்தனர் என  தமிழக அரசு  குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்,  டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் சோதனை போட்டனர். அவரையும், அவரது மனைவியையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள  ED  அலுவலகத்துக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை  விசாரணை, சோதனைக்கு தடை கோரி  உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசுமனு தாக்கல்  செய்தது. தலைமை நீதிபதி கவாய்  தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில்இன்று  டாஸ்மாக்கில்  ED சோதனை, விசாரணை  நடத்த தடை  விதித்து  தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டார்.

இது குறித்து தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சோதனை மூலம் அமலாக்கத்துறை  அனைத்து வரம்புகளையும் மீறி உள்ளது.  லஞ்ச ஒழிப்புத்துறை  ஏற்கனவே டாஸ்மாக் வழக்கில் விசாரணை நடத்தி வரும்போது அமலாக்கத்துறை  ஏன் விசாரிக்க வேண்டும்.

ரூ.1000 கோடி  முறைகேடு நடந்து உள்ளது என்றால் அதன் மூல வழக்கு எங்கே,  தனி நபர் மீது வழக்கு  தொடரலாம். ஆனால்  டாஸ்மாக் என்ற நிறுவனத்துக்கு எதிராக  எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.  தனி நபரின்  விதி மீறலுக்காக அரசு நிறுவனம் மீது   கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்கிறேன்.

இது  தொடர்பாக EDக்கு நோட்டீஸ் அனுப்பவும்,  தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டுக்கு  பதில் அளிக்கவும் அமலாக்கத்துறைக்கு  தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து  திமுக செய்தி தொடர்பாளர்  ஆர்.எஸ்.பாரதி கூறும்போது,  அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.  அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது’ என்றார்.

error: Content is protected !!