மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!
இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகையில்
‘கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 26″ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மழை காரணமாக ஏற்படும் சேதங்களை சரி செய்வதற்கான பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக மழையால் மரங்கள் விழும்பட்சத்தில் அவற்றை அகற்ற இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து பொள்ளாச்சி மற்றும் அதிக மழை பெய்யக்கூடிய இடங்களில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் மழை குறித்த பாதிப்புகளை பொதுமக்கள் 1077 என்கிற அவசர கால உதவி எண்ணுக்கும், மாவட்ட நிர்வாகத்தையும், உள்ளாட்சி நிர்வாகங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.