கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை திருச்சி சாலையில் இருந்து வேகமாக ஒரு கார் வந்தது. காரை கேரளா மாநிலம் ஆளு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரத்தில் இருந்த வாய்க்கால் பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அதிகாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. பள்ளத்தில் விழுந்த காருக்குள் இருந்து வெளியில் வர முடியாமல் மணிகண்டன்
போராடினார். இந்த விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலையை அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கிக் கொண்ட மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு பள்ளத்தில் இருந்து காரை சிங்காநல்லூர் போலீசார் கிரேன் மூலம் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் குளத்திற்கு செல்லும் அந்த 10 அடி உயரவாய்க்காலில் தண்ணீர் குறைந்த அளவே சென்று கொண்டு இருந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.