சென்னை -கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் இன்று காலை லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விழுப்புரத்திலிருந்து அரியலூர் வழியாக திருச்சிக்கு செல்லவிருந்தது பயணிகள் ரயில், வெள்ளூர் ரயில் நிலைத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் செந்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஜேசிபி
இயந்திரங்களைக் கொண்டு மண்சரிவு ஏற்பட்ட இடம் சமன் செய்யப்பட்டது.
இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வெள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலும், செந்துறை ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலும் குறைவான வேகத்தில் ரயில் பாதையில் இயக்கப்பட்டு அரியலூரை வந்தடைந்தது. இதனால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. இதன் பின்னர் தற்பொழுது ரயில்கள் போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புடன் சுரங்கப்பாதை அமைக்கப் பணியும் நடைபெற்று வருகிறது.