தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைகாணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இப்புதிய அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சிறப்பு துணை ஆட்சியர் அலுவலகம், கூட்டரங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், திட்ட அலுவலர் அலுவலகம், முக்கிய பிரமுகர்களுக்கான அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல் பிரிவு ஆகியவையும், முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் அறை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அறை, தேசிய தகவலியல் மையம், அலுவலகப் பிரிவுகள் ஆகியவையும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகம், நிலப் பிரிவு அலுவலகம், உதவி இயக்குநர்கள் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவையும் மூன்றாம் தளத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், நான்காம் தளத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஊராட்சி கூட்டரங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் அறைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், உதவி ஆணையர் கலால் அலுவலகம் போன்ற அலுவலங்களும், ஐந்தாம் தளத்தில் உதவி இயக்குநர் நில அளவை அலுவலகம், சிப்காட்டிற்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குநர் (சுரங்கம்) அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கும்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மு. சாய் குமார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, இயக்குநர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க.வீ.முரளீதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.