தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு இவர்களது தாய் மற்றொரு சகோதரர் கணபதி நகர் வீட்டிற்கு வந்தனர். அப்போது திருவேங்கடம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது திருவேங்கடம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் நேற்று இரவு அறிவழகன், திருவேங்கடம் இருவரும் ஒன்றாக வீட்டில் குடித்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது வாடகைக்கு விட்ட கடையில் வரும் வருமானத்தை பங்கீடு செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி அறிவழகன் ஆத்திரம் அடைந்து கட்டையால் திருவேங்கடத்தை சராமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பலியானதும், அறிவழகன் தப்பி தலைமறைவானதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய அறிவழகனை தேடி வந்தனர். இந்நிலையில் தஞ்சை பகுதியில் மறைவாக பதுங்கியிருந்த அறிவழகனை போலீசார் இன்று கைது செய்தனர். குடிபோதை தகராறில் தம்பியை கட்டையால் தாக்கி அண்ணன் கொலை செய்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.