தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்பியுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.
இந்நிலையில், 2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ.30 கோடி பெற்ற கடனை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதாக ரவிச்சந்திரன் மீது புகார் எழுந்தது. இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேருவின் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்தியது. இதனிடையே சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.