Skip to content

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மீக சுற்றுலாவாக காரில்  கும்பகோணம் வந்தார்.

இன்று காலை கும்பகோணம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு புறப்பட்டனர். கும்பகோணம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது. காரை ஸ்டாலின் ஓட்டி வந்தார்.

தஞ்சை அருகே உதாரமங்கலம் பகுதியில் நாற்றுக்களை ஏற்றிக் கொண்டு வயலில் இருந்து சரக்கு வேனை விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ஸ்டாலின் ஓட்டி வந்த காரும் நாற்று ஏற்றி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

விபத்து  நடந்ததை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தொடர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் ஜெயா சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் செல்லும் வழியில் சிறுமி நிவேனி சூர்யா, துர்கா, குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வேன் டிரைவர் உதாரமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் படுகாயத்துடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!