Skip to content

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிமலேஷ் இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிமலேஷ்  உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாருமதியும் செழியனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்பது மிகவும் சோகமாகும். கடலூர்  செம்மங்குப்பம் பகுதியை  சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி, மகன் செழியன் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிடமணிக்கு  2 குழந்தைகள் தான். அந்த 2 குழந்தைகளும் இன்று ரயில் விபத்தில் இறந்து விட்டதால் அவர் சோகத்தில் மூழ்கி உள்ளார்.

அமைச்சர் கணேசன்,  திராவிடமணி வீட்டுக்கு  சென்று ஆறுதல் கூறினார்.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகில் நின்றிருந்த மார்க்கத்தில்  ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது.

விபத்தில் இறந்த  சாருமதி, பள்ளியின் முதல் மாணவி ஆவார். இவர் 10ம் வகுப்பு தேர்வில் 465 மதிப்பெண் பெற்றவர்.  டாக்டர் ஆகி, அதைத்தொடர்ந்து ஐஏஎஸ்  ஆக வேண்டும் என  சொல்லி வந்தாராம். அதற்குள் குழந்தைகள் போய்விட்டார்களே என  உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

error: Content is protected !!