தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து வெளியேறிய மர்மநபர்கள் வீட்டு உரிமையாளர் மகன் வந்தால் அவரை தாக்கிவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இராஜகிரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹாஜாமைதீன் (53). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் அதே ஊரில் பெரிய தெருவில் வீடு ஒன்றை கட்டிக் கொண்டு இருந்தனர். இதனால்
குடும்பத்தினர் அனைவரும் அங்கு தங்கி உள்ளனர். இராஜகிரி பகுதியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு காலனி வீட்டில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ராஜகிரி வடக்குத் தெருவில் உள்ள ஹாஜா மைதீனின் பூட்டிய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது அந்த வீட்டுக்குள் வீட்டின் உரிமையாளரான ஹாஜாமைதீனின் மகன் மலீக் இப்ராஹிம் (19) வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள் சட்டென்று அங்கிருந்த சின்ன டேபிளை எடுத்து மலீக் இப்ராஹீமை தாக்கி உள்ளனர். இதனால் நிலைகுலைந்து மலீக் இப்ராஹிம் தடுமாறிய நிலையில் அவரை பிடித்து அந்த மர்மநபர்கள் கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அந்த வீட்டின் மாடிப்படிகள் முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
தாக்குதலால் நிலைகுலைந்து போன மலீக் இப்ராஹிம் எழுந்து திருடன், திருடன் என்று கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்த போது நடந்த சம்பவங்களை மலீக் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து மலீக்இப்ராஹிம் பாபநாசம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வீடு முழுவதும் மிளகாய் பொடியை மர்மநபர்கள் தூவி சென்ற சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.