Skip to content

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

  • by Authour

உலக மக்கள் தொகை தினம் இன்று (ஜூலை 11) முதல்  18ம் தேதி வரை ஒரு வாரம்  கொண்டாடப்படுகிறது.இவ்வருடத்தின் கருப்பொருளாக, “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு,   திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்” மற்றும் முழக்கமாக, “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21. அதுவே பெண்ணுக்கு, திருமணத்திற்கும் தாய்மையடைவதற்கும் உகந்த வயது”  என்பதாகும்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட குடும்பநல அமைப்பு மூலம் உலக மக்கள்தொகை தினம் 2025 இன்றுஅனுசரிக்கப்பட்டது.

இதில் குடும்பநல இயக்கத்தின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, செவிலிய மாணவ/ மாணவியர்களின் மூலம் பொதுமக்களிடையே மக்கள்தொகை பெருக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, குடும்பநல பிரசார விழிப்புணர்வு ஊர்தி துவக்கி வைத்து, செவிலியர் கல்லூரி மாணவ/பாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.  பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி  புதுக்கோட்டை  முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.  பொதுமக்களிடையே குடும்பநல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில்  இந்த பேரணி நடைபெற்றது.

உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, செவிலியர் கல்லூரி மாணவியர்களிடையே 08.07.2025 அன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் இன்றையதினம் வழங்கப்பட்டது. கலெக்டர் அருணா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ளிட்டவைகளில் அனைத்து வகையான குடும்பநல முறைகள் குறித்து விழிப்புணர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

அனைத்து தகுதிவாய்ந்த தம்பதியரும் சிறு குடும்பநல நெறியைப் உரிய முறையில் பின்பற்றி பயன்பெற வேண்டும் எனவும்  நிகழ்ச்சியில் கலெக்டர்  அருணா கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் எஸ்.கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

error: Content is protected !!