புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தலைமை பெண் போலீஸ் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விராலிமலை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி கிருஷ்ணவேணி (38). இவர் இலுப்பூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கிருஷ்ணவேணி பணிக்கு சென்ற நிலையில் அவரது கணவர் கணேசன் நேற்று மதியம் சொந்த வேலை காரணமாக வெளியே செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் பேக்கில் வைத்திருந்த ரூபாய் 26 ஆயிரம் பணம் மற்றும் டிரெஸ்சிங் டேபிள் டிராவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை ஆகியவற்றை காணவில்லை. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தலைமை காவலர் கிருஷ்ணவேணி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
