கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வருகின்ற 15 ம் தேதி அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 179 முகாம்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக, முதல் கட்டமாக 60 முகாம்கள் வருகிற 15 ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14 ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 60 முகாம்கள் ஆகஸ்டு 15 ம் தேதி முதல் செப்டம்பர் 14 ம் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக 59 முகாம்கள் செப்டம்பர் 15 ம் தேதி முதல் அக்டோபர் 14 ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 43 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 15 ம் தேதி முதல் அடுத்த மாதம் 14 ம் தேதி வரை நடைபெறவுள்ள முகாம்களில் மாநகராட்சியில்12 முகாம்களும், நகராட்சியில் 9 முகாம்களும், பேரூராட்சிகளில் 8 முகாம்களும், ஊரக பகுதிகளில் 19 கிராம பஞ்சாயத்து மற்றும் 12 பெரி அர்பன் பகுதி என மொத்தம் 60 முகாம்கள் நடைபெறவுள்ளது.
மேற்படி முகாம்களுக்கான விண்ணப்பங்களானது கடந்த 7 ம் தேதி முதல் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பொருட்டு நகர் பகுதிகளில் 420 தன்னார்வலர்களும், ஊரக பகுதிகளில் 592 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள். சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிர் உரிமை தொகைக்கு பொதுமக்கள் நேரடியாக முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பெற்று, அதே முகாம்களில் குடும்ப அட்டை ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். எனவே கரூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.