Skip to content

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் சாமி கும்பிடுவதில் இரு வேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பதாகையை அகற்றக்கோரி ஒரு

தரப்பை சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்த போது, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று நீதிமன்ற உத்தரவின் பெயரிலும், அதிகாரிகள் நடத்திய சுமூக பேச்சுவார்த்தை அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.

கோவில் திறக்க எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்யட்டும் என கூறினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா முன்னேற்பாடு பணிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக கோவிலுக்குள் நுழைந்த பெண்கள் குலவை சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சின்ன தாராபுரம் மாரியம்மன் கோவிலில் இரு வேறு சமுதாயத்தினர் இடையே கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!