தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர்இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், நேற்று அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கவின்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொலை செய்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்த வாலிபர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரது மகன் சுர்ஜித்(24) என்பதும், அவரது தந்தை சரவணக்குமார் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரிய வந்தது. இதையடுத்து சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:
எனது அக்காவும், கொலை செய்யப்பட்ட கவின்குமாரும் பள்ளிப்பருவத்தில் ஒன்றாக படித்தனர். அதை பயன்படுத்திக்கொண்டு என் அக்காவை காதலிப்பதாக கூறி, என் அக்காவை தினமும் சந்தித்து வந்தார். இதை நான் கண்டித்தேன். நீ வேறு சமூகம், நான் வேறு சமூகம் இதெல்லாம் வேண்டாம் என்றேன். அதற்கு கவின்குமார் நான் உன் அக்காவை காதலிக்கிறேன் என்று கூறினார். இதற்காக என் அக்கா வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்கு நோயாளி என யாரையாவது அழைத்து வந்து, என் அக்காவிடம் பேசிக்கொண்டு இருப்பார். இதை நான் பல முறை கண்டித்தும் அவன் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட சண்டையில் அவரை கொலை செய்தேன் என்றார்.
ஆனால் கவின்குமார் உறவினர்கள்., இது ஆணவக்கொலை, இதற்கு சுர்ஜித்தின் பெற்றோருக்கும் தொடர்பு உள்ளது அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றதால், போலீசார் சுர்ஜித்தின் பெற்றோரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலைக்கு மூலக காரணமான சுர்ஜித்தின் அக்காவிடமும் விசாரணை நடக்கிறது.