தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தமிழ்மணி (13).
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பழனி, தனது தங்கை மகன் தமிழ்மணியை அழைத்துக் கொண்டு மானோஜிப்ட்டி கல்லணைக்கால்வாய் ஆற்றுக்கரையில் குளித்து கொண்டு இருந்தார். தற்போது ஆறுகளில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றுக்கரைகளில் பாதுகாப்பற்ற நிலையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வகாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் இதை பொதுமக்கள் பலரும் மீறி ஆற்றில் குளித்து வருகின்றனர்.
இதேபோல் பழனியும், தமிழ்மணியும் கல்லணைக்கால்வாய் ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அலறி உள்ளனர். ஆனால் அவர்களால் இருவரையும் மீட்க முடியவில்லை. இதுகுறித்து பழனியின் உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பழனி, தமிழ்மணி இருவரையும் தேடி பார்த்தனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வெட்டிக்காடு அருகே ரெகுநாதபுரம் பகுதியில் கல்லணைக்கால்வாயில் அடித்து வரப்பட்ட தமிழ்மணி உடலை அப்பகுதி மக்கள் மீட்டு ஒரத்தநாடு போலீசாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்மணி உடல் அடையாளம் காணப்பட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் பழனி உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்தது. இதில் பொட்டுவாச்சாவடி பகுதியில் செல்லும் கல்லணைக்கால்வாய் ஆற்றுப்பகுதியில் பழனியின் உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். பின்னர் பழனியின் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.