தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை கடந்த 16-ம்தேதி நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து மூகூர்த்தகால் நட்டனர். இதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிக்குள் மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் தவெக மாநில மாநாடு தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்திய நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு செய்துள்ளது.