ரஷ்யா, உகரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்க மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இருபக்கமும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து குட்டி நாடான உக்ரைன் 3 ஆண்டுகளாக போர் புரிந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உதவி வருகின்றன. போரை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் பல முறை கூறியும் ரஷ்யா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
அதே வேளையில் அவர் போரை நிறுத்த சில நிபந்தனைகளை விதிக்கிறார். உக்ரைன் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதபடி நிபந்தனைகள் இருப்பதால் போர் நிறுத்தம் நடைபெறவில்லை. எனவே ரஷ்யா மீது அதிக பொருளாதார தடையை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வரை ரஷியாவுக்கு அவர் கெடு விதித்து இருந்தார்.
இதற்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ சென்றார். அவர் நேற்று முன்தினம் பதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து புதின், டிரம்ப் இருவரும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்து உள்ளார். அதன்படி இந்த சந்திப்பு அடுத்த வாரம் அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக புதினின் வெளியுறவு ஆலோசகர் யுரி உஷாகோவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர், ‘முதலில் டிரம்புடன் ஒரு இருதரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது என நாங்கள் பரிந்துரைத்தோம். இந்த சந்திப்பு மிகவும் வெற்றிகரமாகவும்,ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் என நம்புகிறோம்’ என தெரிவித்தார். அதேநேரம் இந்த சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பங்கேற்க செய்வது என்ற டிரம்ப் தூதரின் பரிந்துரை குறித்து விவாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கான பரிந்துரையை யார் வைத்தது? என்ற கேள்விக்கு, ‘அது முக்கியமில்லை, இரு தரப்பும் ஆர்வத்தை வெளியிட்டன’ என புதின் கூறினார்.பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கி பங்கேற்பதற்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு, ‘நான் அதற்கு எதிராக இல்லை என்பதை பலமுறை தெரிவித்து விட்டேன். இது சாத்தியமானது தான். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன என்றார்.
டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி 2வது முறையாக அதிபா பொறுப்பு ஏற்றார். அதன்பிறகு அவர் இன்னும் புதினை சந்திக்கவில்லை. இந்த சந்திப்பு நடந்தால் அது தான் முதல் சந்திப்பு. போரை நிறுத்துவது குறித்து இந்த சந்திப்பில் டிரம்ப் வலியுறுத்துவார். அமைதிக்கான நோபல் பரிசு ஆசை டிரம்பை பயங்கரமாக ஆட்டிவிப்பதால் இந்த போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கலாம் என டிரம்ப் கருதுகிறார்.