தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், தனியார் பேருந்துகளில் கட்டண சலுகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிதாக அமைக்கப்படவுள்ள மற்றும் அமைக்கப்பட்ட குடியிருப்பு நகர்களுக்கு மறைந்த தியாகிகளின் பெயரினைச் சூட்டுதல், மறைந்த தியாகிகளுக்கு சிலை வைத்தல், மத்திய அரசு ஓய்வூதியம் கோரிய மனுக்கள் உள்ளிட்ட 43 மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.