Skip to content

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது
2வது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த ரேசன் பொருட்கள் இவர்களது வீடுகளுக்கு  சென்று வழங்கப்படும்.

இந்த திட்டம் தொடர்பாக  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  வீடியோவில், “வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போகிறோம். 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்று திறனாளிகள் என 21,70,454 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையப் போகிறார்கள். இது எனக்கு மனதுக்கு பிடித்த திட்டம். ஒரு திட்டத்தை அறிவித்த உடன் கடமை முடிந்து  விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அந்த திட்டத்தின் பலன் கடைக்கோடியில் இருக்கும் கடைசி மனிதனையும் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்கிறோம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  70 வயது முதியேேர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று   முதல்வர் ஸ்டாலினே ரேஷன் பொருட்களை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு,  தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திட்டம் மிகவும் உபயோகமாக உள்ளது என பயனாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த திட்டத்தை தொடங்கி வைக்க சென்றபோது  முதல்வர் பொதுமக்களையும்  சந்தித்து பேசினார்.

error: Content is protected !!