கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்ப விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், மத்திய வன அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சுசில்குமார் அவஸ்தி, தமிழ்நாடு வனத்துறையின்
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்து, யானைகள் வாழ்விட மேம்பாடு மற்றும் யானை மனித மோதல்களை தடுப்பது குறித்த பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில், யானைகள் பாதுகாப்பு குறித்த புத்தகங்கள் மற்றும் விழிப்புணர்வு போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில வனத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த வனத்துறை ஊழியர்களுக்கு கௌரவ விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், தெப்பக்காடு முதுமலை யானை முகாம் குறித்த சிறப்பு புகைப்பட புத்தகமும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் கூறியதாவது, ‘உலகில் உள்ள ஆசிய காட்டு யானைகளின் எண்ணிக்கையில் 60 சதவீத யானைகள் இந்தியாவில் தான் உள்ளன. நமது நாட்டில் 29 ஆயிரம் காட்டு யானைகள் உள்ளன. 15 மாநிலங்களில் 150 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யானைகளை பாதுகாக்க என்.ஜி.ஓ.க்கள், உள்ளூர் மக்கள் உடன் இணைந்து வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். காடுகள் பாதுகாப்பு, வேட்டைத் தடுப்பு, மனித – யானை மோதல்களை குறைக்க முன்கள வனப்பணியாளர்கள் கடினமான சூழலில் அர்ப்பணிப்பு உடன் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தான் யானைகள் பாதுகாப்பின் ரியல் ஹீரோக்கள்.
யானைகள் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யானைகள் மட்டுமின்றி அனைத்து வன உயிரினங்கள் மற்றும் வன வளங்களை பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சூழலியல் குறித்த தொலைநோக்கு பார்வை, நவீன அறிவியல், உள்ளூர் மக்கள் பங்கெடுப்பு உள்ளிட்டவை மூலம் தான் யானைகள் பாதுகாக்க முடியும். யானைகளை பாதுகாப்பதன் மூலம் காடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர் பெருக்கம், ஆறுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்து இப்பணியில் ஈடுபடுவோம்’ என தெரிவித்தார்.
இதனை அடுத்து, நிகழ்வின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் கண்காட்சி அரங்குகளையும், ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களின் ஓவியங்களையும் மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார்.
குறிப்பாக உண்ணிச் செடியை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யானை மற்றும் காட்டெருமை சிலைகளை அமைச்சர் கண்டுரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங், ‘முகாம்களில் யானைகளை பராமரிப்பதில் அதன் உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பது மிகவும் அவசியமாகிறது அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் குறிப்பு கையேடுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.
அம்பானி நிறுவனத்தின் வந்தாரா உயிரின பூங்கா குறித்த சர்ச்சைகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர், ‘உலகின் பல்வேறு பகுதிகளிலும் வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன. அதேபோல் இந்தியாவிலும் வன உயிரின பூங்காக்கள் உள்ளன. இவற்றின் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதோடு, அடுத்த தலைமுறைனர் வனவிலங்குகள் குறித்து தெரிந்து கொள்ளவும் உதவுகின்றன. வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில் வரும் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
வந்தாராவில் பராமரிக்கப்படும் வனவிலங்குகள் குறித்து ஆய்வு செய்ய அவர்கள் தயாராகவே உள்ளனர். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொள்ள முடியாது’ என தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், ‘அந்தந்த மாநிலங்களில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை பொறுத்து அவற்றை பாதுகாப்பதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.
மனித விலங்கு மோதல்கள் சம்பவங்களை பொருத்தவரை வனத்துறை சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நவீன கருவிகளின் உதவியோடு மேற்கொள்ளப்படுகிறது. இருந்தும் மனிதர்கள் இயற்கையோடு அருகில் வாழும் நிலை உள்ளதால் நூறு சதவீதம் மனித விலங்கு மோதலை தடுக்க முடியும் என கூற முடியாது. ஆனால் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் அச்சம்பகங்களை குறைக்க எடுக்கப்பட்டு வருகிறது. உயிரழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிதியுதவையும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரீதியில் ரயில்வே தண்டவாளங்களில் யானை விபத்து ஏற்படும் சம்பவங்களை தடுக்கும் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது’ என தெரிவித்தார்.